தலைமுறைகளை இணைக்கட்டும் இராமாயணம். குழந்தைகள் இயல்பாக கதை கேட்பதில் 3/4 வயது பிராயத்திலிருந்தே ஆர்வங்காட்டுவர். தம் பெற்றோர் அல்லது தாத்தா/பாட்டியிடம் கதைகள் சொல்ல நச்சரிப்பர். இயற்கையிலேயே குழந்தைப்பருவம் இவ்வாறே. எந்த நாடு, இனம், மொழி சார்ந்தவராயினும் எந்த சமூகப்பின்னணி, பொருளாதாரப்பின்னணி கொண்டவராயினும் இவ்வாறே. மழலைப் பருவத்தில் ஒன்றிலிருந்து மூன்று வயதிற்குள் மொழி மற்றும் எளிமையான மாற்று சொற்களில் சிறுதேர்ச்சி சுற்றியிருப்போர் பேச்சிலிருந்து பெறுகின்றனர். நான்கு/ஐந்து வயதில் கதைகள் மூலம் வாழ்க்கையில் உறவுமுறைகள், குடும்பம், சுற்றம், வாழ்க்கையில் மேடு பள்ளங்களில் மனோதைரியம், இரக்க குணம், பண்பாடு, சரித்திரம் முதலியன குறித்து அறியத் தொடங்குகின்றனர்.
ஏதாவது ஒரு கதையில் ஒரு கதாப்பாத்திரம் இன்னொருவரை அநியாயமாக நடத்துவது கேட்டால் இக்குழந்தை பொங்கி எழுந்து நியாயத்துக்காக பெரியவனானபின் போராடக்கூடும்.
கடின உழைப்பு, ஒன்றிணைந்து வாழ்தல், உழைத்தல், கனிவான பேச்சு, விட்டுக்கொடுத்தல், மன்னித்தல், இயற்கையோடு இணைந்ந வாழ்வு - இந்த மாதிரி பலவற்றை, கேட்ட கதைகளில் கதைமாந்தர் நடவடிக்கைகளிலிருந்து கிரகித்து, தாங்களும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள தலைபட்டன.
ஆம், சென்ற தலைமுறைக்கு முந்தியது வரை குழந்தைகளுக்கு குடும்ப பெரியவர்களே கதை சொல்பவராக இருந்தனர். இரவு கண் சிமிட்ட தொடங்க நிலவொளியிலே குழந்தைகள் இதற்காக பெரியவர்களை வட்டமிட்டனர்.
எல்லாம் மாறிவிட்டது. கதை கேட்கும் ஆர்வம் மாறவில்லை. கதை சொல்பவை புத்தகங்கள் அல்லது விடியோக்கள். இம்மாற்றம் மூன்று விளைவுகளை ஏற்படுத்தியது.
முதலில் இவ்வாறு புத்தகங்கள்/விடியோ கதைகளால் விளையும் நுணுக்கமான கேள்விகளுக்கு பதில் சொல்வாரில்லை. தாங்களாகவே குழந்தைகள் பதிலை தேற்றி பிறகு தான் சொல்வது/நினைப்பதே சரி என்று வளர தலைப்படுகின்றனர்.
இங்கு கதை சொல்லி, குழந்தைகளை விட வேறு பின்னணியிலிருந்து வந்தவராதலால் கண்ணோட்டம் வேறு, குழந்தையின் சுற்றுப்புறம் வேறாக பெரும்பாலும் உள்ளது.
முன்னர் புராணக் கதை கேட்டு மனதில் ஒரு கற்பனை பிம்பம் குழந்தை ஏற்படுத்தயது. விடியோவில் கற்பனை, குழந்தையிடமிருந்து கதை சொல்லிக்கு தாவி விட்டது. பத்து தலை ராவணன் உருவக படுத்த தேவை இல்லை.
எல்லாவற்றையும் விட முக்கியமாக குழந்தை அவர்கள் வீட்டுப் பெரியவர்களுடன் தத்ரூபமான கதை சொல்லுதல் நீர்த்துப் போனது. பெரியவர்கள் கூறும் கதை மாந்தருடன் ஓட்டி உறவாடுவது போய் விட்டது. இக்காலப்பிள்ளைகள் பெரும் புத்திசாலிகள். உலகம் கையடக்கம். உலக நடப்புகள் தெரியும். அதை எப்படி கையாள்வது என்பது விட்டுப் போகிறது. பகிர்வது குறைந்து எதற்கும் வாதாடுவது அதிகரித்து இது சமுதாயத்தை டைவர்ஸில் கொண்டு விடுகிறது. இருப்பதை பகிர்வதும், அடுத்தவருக்கு பணிவிடையும் குறைந்து விட்டது.
கல்யாணத்துக்கு முன் பழகுகின்றனர். ஜாதகங்களும் பெரும்பாலும் ஒத்துப் போவதையும் பார்த்து ஆசையுடனும் ஆடம்பரமாக திருமணங்கள் நடத்தியும் டைவர்ஸ் அதிகரித்தே மணமுறிவு சாதாரணமானது.
முன்னைவிட, பெற்றோர் தங்கள் மக்கட் செல்வங்களிடம் நண்பர்களாக இருக்கின்றனர். இந்த நட்புறவு சாதாரண பேச்சுக்கு உதவும், ஆழமான பேச்சுக்கள் பரிமாறிக் கொள்வதில்லை. கதைகள் தான் இதற்கு தீர்வு. பிள்ளைகள், மண உறவு, வாரிசுரிமைகள், கடின நாட்களையும் வெல்வது முதலியவற்றை தாத்தா /பாட்டி போதித்தனர்.
குழந்தைகளுக்கு உணவு உண்பது போன்ற அத்யாவசியமே கதை கேட்பதும். கதை சொல்ல பெரியவர்கள் எக்காலத்திலும் முன் வர வேண்டும்.
ஆம், கராத்தே கற்றால் மட்டும் தைரியம் வந்து விடுமா? தைரியசாலிகள் மாவீரரின் துணிச்சல் பற்றிய கதைகள் தான் இத்தைரியத்தை அளிக்க வல்லது. இருக்கிற சிறிது நேரம் ஹோம் ஒர்க்கில் செலவாகிறது. பெற்றோரிடம் என்ன பேசுவது என்பதே சற்று வளர்ந்தபின், விடலை பருவம் தொட்டு தெரியாமலே போய் விடுகிறது.
சரி, எந்த விதமான கதைகளை சொல்வது, எவை நல்லவை, உபயோகமானவை, நன்மதிப்பு அளிப்பவை எவை எனின் பாரத தேசத்தின் பொக்கிஷமான பஞ்சதந்திர கதைகள், இராமாயணம், மகாபாரதம் என தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வருகின்றனவே அவைதான். குழந்தைகள் ஐந்து ஆறு வயதில் இந்த கதைகளுக்கு தயாராகிறார்கள்.
இந்த இரு இதிகாசங்களில் மையக் கதை மட்டுமல்லாமல் கிளைக் கதைகள் பல உள்ளனவே. இவற்றை கேட்காமலேயே மதம் மாறினால், மதம் மாற்றிகளால் ஊட்டப்பட்ட நஞ்சில் இந்த கதைகள் மேல் சிலருக்கு வன்மமே வந்து விடுவதை காண்கிறோம்.
இப் பொக்கிஷங்களைப் பற்றி சமுதாயத்தில் ஒரு பொதுவான ஈடுபாடு குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. இராமன் கானகம் சென்றார் தெரியும். ஏன் சீதை தொடர்ந்து கானகம் சென்றாள்? என்ன சொல்லி தன் கணவரை சம்மதிக்க வைத்தாள்? இராமனின் பதில் என்ன? இந்த சம்பவம் கணவனை நேசிக்கும் மனைவி, கணவனுக்கு ஆபத்து நேரும் பொழுது நடந்து கொள்ள வேண்டிய முறையை போதிக்கிறது. இந்த மாதிரி ஆழ்ந்த செறிவுள்ள உரையாடல்கள் கேட்டு வளரும் குழந்தைகளுக்கும் அது கேட்காத குழுந்தைகளுக்கும் வித்தியாசம் உணர்வீர். கதை கேட்காவிடில் குழந்தைகளுக்கு அரிய உலக அறிவு சார்ந்தவை உணராமல் போவர். இக்காலங்களில், பல குழந்தைகள் தாங்கள் அறிவு வளர்ச்சியுறும் வயதில் இவற்றை கேட்க வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது உண்மை.
நாம் கதைகளை அவர்களுக்கு சொல்லாமல் விடுவது அவர்கள் முழு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகும். இதற்கு ஒரு மாற்று தான் (Read Ramayana) “இராமாயணம் படியுங்கள்”. படித்து காண்பியுங்கள்.
இருபத்தி நாலாயிரம் சுலோகங்கள் கொண்டது வால்மீகி இராமாயணம். உத்தர காண்டம் பிற்சேர்க்கை என்று பலரும் முடிவுற்றது போலக் கொண்டால் இருபதினாயிரம் சுலோகங்கள் மட்டுமே. வாரம் ஒரு நூறு சிலோகங்கள் படித்து வர, இருநூறு வாரங்களில் சிரமமில்லாமல் இராமாயணம் முழுவதும் படித்து விடலாம். மெகா சீரியல் பார்ப்பது இல்லையா. இராமாயணம் முதல் மெகா சீரியல் எனக் கொள்ளுங்களேன். ஒவ்வொரு சர்கத்திலும் கதை வேகமாக நகர்வதில்லை. மாறாக பலதரப்பட்ட விவரங்கள், வர்ணணைகள், சர்கங்களில் காணக் கிடைக்கிறது. இவ்வகை விவரணங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளை படம் பிடித்துக் காட்டுகின்றன. வால்மீகி இராமாயணம் படிப்போம். நான்கு வருடங்களுக்குள் நிதானமாக உங்கள் குழந்தைகள்/பிள்ளைகள்/பேரன்களுக்கு படித்துக் காண்பிப்பதற்காகவே வடிவமைக்கப்படது.
அவர்களுக்கு ஐந்து/ஆறு வயதில் ஆரம்பித்து, வாராவாரம் தொடர்ச்சியாக படித்து காண்பித்தால், ஒன்பது/பத்து வயதுக்குள் முழுவதும் முடிந்து விடும். அச்சமயமே அவர்கள் கதை கேட்கும் ஆர்வம் அதிகம். வாழ்க்கை என்ன என்பதை அவர்கள் ஒரு மாதிரி ஊகித்து உணரும் பருவமது. நீங்கள் இவற்றை நேரில் படித்துக் காண்பிக்கலாம் அல்லது நீங்கள் படித்து விட்டு சாராம்சங்களை பகிரலாம். கதை சொல்பவர் கேட்பவருக்கும் உள்ள பிணைப்பு பாசமிக்கதாகவும், அதே சமயம் அறிவு சார்ந்ததாகிவிடும். பிற்காலத்தில் இந்த நான்கு வருடங்கள் மிகவும் நெகிழ்வான உன்னதமான தருணமாக வாழ்க்கையில் ஆகிவிடும். ஓடிவிடும் சரிந்துவிடும் மணற்சரிவு போன்ற வாழ்க்கை நினைவுகளில் இவை குன்றென உயர்ந்து நிற்கும். பாசப்பிணைப்பையும் என்றென்றும் உறுதி கொள்ளச் செய்யும். வாழ்க்கையின் மிக நெருக்கமான காலங்களில் ஒரு நிபுணரிடம் ஆலோசனை கேட்கும் இக்காலப்பாங்கை தவிர்க்கலாம்.
வெளி நாட்டுக்குச் சென்று பேரன்/பேத்திகளுடன் வசிக்கும் தாத்தா/பாட்டிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அதை அப்படியே விடியோ அழைப்புகள் மூலம் தொடரலாம். இராமாயணம் படித்துக் காண்பிப்பது தாத்தா/பாட்டிகள் தங்கள் பேரன்/பேத்திகளுக்கு பண்பாடு, கலாச்சாரத்தை மறைமுகமாக ஆனால் சுவையாக போதிக்க ஒரு வாய்ப்பு.
எப்படி இதில் பங்கேற்பது என்பதை விளக்குகின்றோம். ஓர் எளிய நடைமுறையை www.readramayana.org வெப்பகத்துக்கு சென்று உங்கள் ஈமெயிலை பதிவு செய்யுங்கள். நாங்கள் அனுப்பும் படிவத்தை பூர்த்தி செய்து, அதாவது எந்த மொழியாக்கம் - தமிழ். சமஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம் என நீள்கிறது மொழியாக்கங்கள். எது உங்கள் விருப்பம், எந்த தேதி தொடக்கம், உங்கள் சிறார்கள் பிறந்த தேதி என்பதை தெரிவித்தால் முற்றிலும் இலவசமாக அனுப்பி வைக்கிறோம். உங்கள் வயது, வசிக்கும் இடம், ஆணா பெண்ணா என்பதை தெரிவித்தால் நாங்கள் யார் யாரை இவை ஈர்த்தன என அறிவோம்.
வாராவாரம் உங்கள் ஈமெயில் பெட்டியில் வந்து விழும். பாலகாண்டத்தில் ஆரம்பித்து வாரம் கிட்டத்தட்ட நூறு சுலோகங்களுக்கு மிகாமல் சர்கங்கள் சில அனுப்புவோம். சுலோகங்கள் எந்த மொழி,மொழி பெயர்ப்பின் மொழி தெரிவிக்கலாம். இவையுடன் சில குறிப்புகளும் அவ்வப்போது சில சர்கங்களின் பக்கவாட்டில் கொடுத்துள்ளோம். ஶ்ரீ கிருஷ்ண சர்மா இந்த வெப்பகத்தை நடத்துகிறார். (ஒலி வடிவத்தில் சுலோகங்கள் தர ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன).
அவர் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் உள்ளம் பாரதத்திலேயேஉள்ளது. இந்த வெப்பகத்துக்கு உலகத்திற் பல பாகத்திலிருந்து, தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டுள்ளனர். இதை படிப்போர் ஏற்கெனவே ஒன்பதாயிரம் பேரை தாண்டி பத்தாயிரத்தை நெருங்குகிறது. இன்னும் லக்ஷக்கணக்கில் எல்லோருக்கும் பரப்பவே இம்முயற்சி.
www.readramayana.org க்கு வருகை தந்து இந்த வேள்வியில் பங்கு கொள்ள அழைக்கின்றோம்.